ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 25, 2020, 19:00 [IST] ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்: புதுமுக இயக்குநர்களின் படங்களிலேயே அதிகமாக நடிப்பது ஏன்" என்ற கேள்விக்கு ஜோதிகா கூறியதாவது: “புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது சவாலானது. ரொம்ப புதிதான கதைக்களம் எழுதுவார்கள். இந்த இடத்தில் பாட்டு வர வேண்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் கைதட்ட வேண்டும் என்ற ஒரு வரையறையில் எழுதமாட்டார்கள். ஒரு வசனத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். தேவையில்லாத காமெடிக் காட்சிகள் இருக்காது. புதுமுக இயக்குநர்களின் எண்ண ஓட்டமே வித்தியாசமாக இருக்கிறது. எனக்கும் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிப்பதற்குப் பிடிக்கவில்லை. ஆகையால் புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களும் கதையில் என்ன இடத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை நேரடியாக ரொம்பத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரைக்கதை எப்போதுமே புதுமையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். ஒரு படத்தை அனைவருமே விரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். படம் பார்க்கும் ரசிகர்கள் யாருமே போராக நினைக்கக் கூடாது. அது டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கக் கூடாது” இவ்வாறு ஜோதிகா தெரிவித்தார். “சமூக சேவையில் சிவகுமார் சாருடைய குடும்பமே சிறந்து விளங்குகிறது. யாருமே அரசியலில் இல்லை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? அரசியலுக்கு வந்து நல்லது பண்ணலாமே.. அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா” என்ற கேள்விக்கு ஜோதிகா பதில் கூறியதாவது: “அரசியலுக்கு வராமல் நிறைய நல்லது பண்ணலாம். அரசியலுக்கு வராமல் உண்மையில் அதிகமாக நல்லது பண்ண முடியும். கண்டிப்பாக தேர்தலில் எல்லாம் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அரசாங்கத்தை நம்பி இருக்கக் கூடாது. ஒரு ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்” என்று ஜோதிகா பதிலளித்தார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|