குடும்பஸ்தன்

kudumbasthan
நடிப்பு
மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர். சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல்

ஒளிப்பதிவு
சுஜித் என் சுப்பிரமணியம்

படத்தொகுப்பு
கண்ணன் பாலு

இசை
வைசாக்

திரைக்கதை
ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன்

இயக்கம்
ராஜேஷ்வர் காளிசாமி

தயாரிப்பாளர்
எஸ். வினோத் குமார்

தயாரிப்பு நிறுவனம்
சினிமாக்காரன்

வெளீயீடு:
24 ஜனவரி 2025

     பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலி வெண்ணிலாவை (சான்வி மேக்னா) சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிறார், நவீன் (மணிகண்டன்). நவீன் வீட்டிலேயே இருவருடைய வாழ்க்கையும் தொடங்குகிறது. நவீன் ஒரு விளம்பர டிசைனிங் நிறுவனத்தில் வேலை செய்ய, வெண்ணிலா ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வருகிறார். நவீனின் தந்தை ரியல் எஸ்டேட் புரோக்கராகப் பெரிதாக வருமானம் ஈட்டாததால் மொத்த குடும்பத்தின் பொறுப்பும் நவீனின் மேல் விழுகிறது. இந்த நிலையில் அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்னையில் அவருக்கு வேலை பறிபோக, அதே சூழலில் அக்கா கணவரின் (குரு சோமசுந்தரம்) முன் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நெருக்கடியும் உண்டாகிறது. இதனால் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அவர், கடன் வாங்கி செலவுகளை சமாளிக்கிறார். அது அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதை கலகலப்பாகச் சொல்கிறது படம்.

     குளியலறையில் தனியாகப் பேசிக் கொள்ளும் இடத்தில் சிரிப்பையும், இறுதியில் வெடித்துக் குமுறும் இடத்தில் குடும்பஸ்தனின் உணர்வுகளையும் ஆழப் பதிய வைக்கிறார் மணிகண்டன். ஜீரோ பேலன்ஸ் ஹீரோவாக இருந்தாலும் தன் நடிப்பால் நம்மிடம் முழு மதிப்பெண் வாங்குகிறார் மணிகண்டன்.

     போட்டித் தேர்வுக்குப் படிக்கும் நாயகி சான்வி மேக்னா, நாயகனை அறைந்துவிட்டுப் பேசுகிற இடத்தில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அனைத்திலும் அட்டகாசமானதொரு நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்.

     நக்கலான சிரிப்பு, மச்சானை எப்போதும் மட்டம் தட்டுவது, மனைவியைப் பாடாய்ப் படுத்துவது எனக் குரு சோமசுந்தரம் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். அவரது மனைவியாக நடித்துள்ள நிவேதிதா ராஜப்பன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். அப்பாவாக வரும் ஆர்.சுந்தராஜன்மற்றும் தாயாக வரும் குடசனத் கனகம் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை. பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் ஆகியோர் ஆங்காங்கே சிரிப்பு மூட்டுகிறார்கள்.

     வைசாக் இசையில் ஷான் ரோல்டன் குரலில் வரும் ‘மானம் பறக்குது’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்தின் மீட்டருக்கு ஏற்ப பயணம் செய்ய வைக்கின்றன.

     கோயம்புத்தூரின் பல இடங்களை நேரில் பார்ப்பது போன்ற ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் சுஜித் என் சுப்பிரமணியம்.

     சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்ப கதையை, தமது திறமையான திரைக்கதையின் மூலம் அலுப்பூட்டாமல் புதுமையாகக் கொடுத்திருக்கிறார்கள் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ராஜேஷ்வர் காளிசாமி. ஒரு சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இந்த ‘குடும்பஸ்தனை’ தாராளமாக கவலைகளை மறந்து குடும்பத்தோடு கண்டு ரசிக்கலாம்.

*****

பாடல்கள்
1. ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
படம் : குடும்பஸ்தன் (2025)
பாடியவர் : ஷான் ரோல்டன்
இசை : வைசாக்
பாடலாசிரியர் : வைசாக்

வீடியோ


மானம் பறக்குது
ஞானம் பொறக்குது
வாழ்க்கை சறுக்கினா
ஊரே சிரிக்குது

மானம் பறக்குது
ஞானம் பொறக்குது
வாழ்க்கை சறுக்கினா
ஊரே சிரிக்குது

சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சுக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ

சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சுக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ

அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

ஏ பொறியில மாட்டினா எலி மாறி
நான் ஓடுறேன் இப்போ தடம் மாறி
ஹெல்புக்கு கூப்டேன் கருமாரி
பட் அவளும் சொல்ட்டா ஐ ஆம் சாரி

கஷ்டத்துக்கு குறை இல்ல
கட்டம் ஏதும் சரி இல்ல
நல்லவன்னு பேரெடுத்து
ஒன்னுத்துக்கும் பயன் இல்ல

எல்லாம் கடந்து போகனுமா
நட பிணமா நானும் வாழனுமா
ஒரு நாள் எல்லாம் மாறிடுமா
அதுக்குள்ள உசுரும் போயிடுமா

அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

ஓஓஓ கால் மேல் கால் போட்டு
வாழணும்னு ஆசை இல்ல
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
போக வர காசு இல்ல
கஷ்டத்த நா சொல்ல வந்தா
கேக்க ஓரு நாதி இல்ல
கொஞ்ச நேரம் கேட்டவனும்
ஓடிட்டானே பாதியில

கஷ்ட பட்டு படிச்சு
காலேஜ் எல்லாம் முடிச்சு
வேலை தேடி சலிச்சு
நிம்மதிய தொலச்சு

என்னதான் நடக்கும் நடகட்டுமே
உள்ள வெறுப்பானாலும் சிரிக்கணுமே
கடவுலும் கண்ண தொறக்கணுமே
இதுக்கெல்லாம் ஒரு வழி பொறக்கணுமே

அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ
தண்ணி குட்றா
அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ

*****