செக்கச் சிவந்த வானம்

chekka chivantha vaanam
நடிப்பு
அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், சிவா ஆனந்த், ஜோதிகா, டயானா எரப்பா, அதிதிராவ் ஹைதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயசுதா

ஒளிப்பதிவு
சந்தோஷ் சிவன்

படத்தொகுப்பு
ஏ.ஸ்ரீகர் பிரசாத்

இசை
ஏ.ஆர். ரகுமான்

திரைக்கதை
மணிரத்னம், சிவா ஆனந்த்

இயக்கம்
மணிரத்னம்

தயாரிப்பாளர்
மணிரத்னம், சுபாஸ்கரன் அல்லிராஜா

தயாரிப்பு நிறுவனம்
லைகா தயாரிப்பகம், மெட்ராஸ் டாக்கீஸ்

வெளீயீடு:
27 செப்டம்பர் 2018

     மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படம் ஒருவகையில் ‘நாயகன்’ படத்தின் புதிய வடிவம் என்று கூறலாம்.

     பெரியவர் என அனைவராலும் அழைக்கப்படும் சென்னை தாதா சேனாதிபதி (பிரகாஷ் ராஜ்), வரதன் (அரவிந் சாமி), தியாகு (அருண் விஜய்), எத்தி (சிலம்பரசன்) என 3 மகன்கள், மகள், மனைவி லட்சுமி (ஜெயசுதா) என வாழ்ந்து வருகிறார். தாதா சேனாதிபதியை கொல்ல சதி நடக்கின்றது. சேனாதிபதியின் தொழில் எதிரி சின்னப்பதாஸ் (தியாகராஜன்) தான் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக அவருடைய மகன்கள் முடிவு செய்து சின்னப்பதாஸை பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால் சேனாதிபதியோ, தன்னை கொலை செய்ய முயன்றது சின்னப்பதாஸ் இல்லை, தன் மகன்களில் ஒருவர் தான் என்பதை தனது மனைவி லட்சுமியிடம் கூறுகிறார். திடீரென ஒருநாள் சேனாதிபதி நெஞ்சுவலியால் இறந்துவிட, அவருடைய இடத்தை யார் பிடிப்பது யார் என மூன்று மகன்களுக்கு இடையே நடக்கும் போர்தான் இந்த படத்தின் கதை.

     தாதா சேனாதிபதியின் மகன்களான வரதன், தியாகு, எத்தி ஆகிய மூவருக்கும் இடையிலான போட்டிதான் படத்தின் பிரதான கதை என்றாலும் போலீஸ்காரராக வரும் ரசூல் (விஜய்சேதுபதி) தான் இந்த படத்தின் உண்மையான கதாநாயகன். வரதனின் நண்பனாகவும், அதே நேரத்தில் வரதனை கொலை செய்ய தியாகு, எத்திக்கு உதவி செய்பவராகவும் வருகிறார். குறிப்பாக படத்தின் இறுதியில் ரசூல் கூறும் தன் வாழ்வின் ப்ளாஷ்பேக் அருமை. மொத்தத்தில் மணிரத்னம் படத்திலும் விஜய் சேதுபதி தன் முத்திரை நடிப்பை தொடர்வது சிறப்பு.

     சிம்பு மிகவும் அடக்கமாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் பல இடங்களில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தை மருத்துவமனையில் இருப்பதாக சேதி வந்த போது ‘நான் வரணுமா?’ என்று கேட்கும் இடத்திலும், தன்னுடைய காதலி கொல்லப்பட்டதை நேரில் பார்க்கும் இடத்திலும், ‘நீ என் கூட கொஞ்ச நாள் இரும்மா’ என்று தாயிடம் கெஞ்சும் இடத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

     அரவிந்தசாமியுடன் மோதும் கேரக்டர் அருண்விஜய்க்கு என்றாலும் மிகவும் ஸ்டைலிஷாக வருகிறார். அதுவும் தன் தந்தையின் சோபாவில் அமரும் காட்சி மிகவும் அருமை.

     ஜோதிகா, டயானா எரப்பா, அதிதிராவ் ஹைதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய நான்கு கதாநாயகிகளையும் சம அளவில் பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம். பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான் மற்றும் இணைக் கதாசிரியர் சிவா ஆனந்த் (ஜோதிகாவின் அப்பாவாக நடித்துள்ளார்) ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார்கள்.

     ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன.

     தளபதி, நாயகன் போன்ற தாதா படங்களை எடுத்த மணிரத்னம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தாதா கதையை கொடுத்துள்ளார். ஹாலிவுட் படமான ‘காட்ஃபாதர்’ படத்தின் சாயல் தோன்றினாலும் அலுப்பில்லாத விறுவிறுபான திரைக்கதை அதை எல்லாம் மறக்கடிக்கிறது.