|
|
அலைகள் ஓய்வதில்லை![]() நடிப்பு
கார்த்திக், ராதா, தியாகராஜன், சில்க் ஸ்மிதா, கமலா காமேஷ், பெரிய கருப்பு தேவர், வெள்ளை சுப்பையாஒளிப்பதிவு
பி. கண்ணன்படத்தொகுப்பு
ஆர்.பி. பாஸ்கரன்பாடல்கள்
பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜாஇசை
இளையராஜாகதை, வசனம்
மணிவண்ணன்திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜாதயாரிப்பாளர்
ஆர். டி. பாஸ்கர்தயாரிப்பு நிறுவனம்
பாவலர் கிரியேஷன்ஸ்வெளீயீடு:
18 ஜூலை 1981வீடியோ ***** பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் இளையராஜா சகோதரர் பாஸ்கருடன் தயாரித்த படம் தான் அலைகள் ஓய்வதில்லை. தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து வந்த பாரதிராஜா, முதன்முதலாக தோல்வியைச் சந்தித்தது ‘நிழல்கள்’ படத்தில்தான். இதையடுத்து ஓர் வெற்றி அவசர அவசியம் என்ற நிலையில், ‘நிழல்கள்’ கதையை எழுதிய தன்னுடைய உதவி இயக்குநர் மணிவண்ணனிடமே தனது அடுத்த கதையையும் கேட்டு வாங்கினார். தனது குறிக்கோளில் உறுதியாயிருந்து இந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் வெற்றியும் பெற்றார் பாரதிராஜா. ஏழை இந்து பிராமணக் குடும்பத்தின் பையனுக்கும் பணக்கார கிறிஸ்தவ வீட்டுப் பெண்ணுக்கும் நடுவே மலர்கிற காதலும், பணம், ஜாதி, மதம், அந்தஸ்து என எல்லாமே கலந்துகட்டி, அந்தக் காதலைக் காவு வாங்க முயல்வதும், இரண்டு இதயங்களும் இணைந்துவிட்ட பிறகு, இடையில் மதத்திற்கு என்ன வேலை என்று காதலர்கள் கை கோர்ப்பதும், என ‘அலைகள் ஓய்வதில்லை’ கவிதை போல் காதலையும் மத நல்லிணக்கத்தையும் ஒரு சேர சொன்ன படம். இதனால் ஆகச்சிறந்த வெற்றியும் பெற்ற படம். பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஏழை மாமியின் மகன் விச்சு. பள்ளி நேரம் போக, நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுவதுதான் அவன் வேலை. அதே ஊரில் உள்ள பணக்கார டேவிட்டின் தங்கை தான் மேரி. பட்டணத்தில் படிக்கும் இவள் அண்ணனின் முழுக்கட்டுப்பாட்டில், பயந்து நடுங்கி வளர்கிறாள். விச்சுவும் மேரியும் சந்திக்கும் போது முட்டிக் கொள்கிறார்கள். கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த மேரி, பாட்டு பாடுகிறாள். அந்தப் பாட்டு நாராசமாய் இருக்கவே விச்சுவும் அவன் நண்பர்களும் கேலி செய்கிறார்கள். அதன் பிறகு, விச்சுவின் அம்மாவிடம் பாட்டு கற்க வருகிறாள் மேரி. கொஞ்சம் கொஞ்சமாகப் பாட்டு கற்று தேர்கிறாள் மேரி. ஒருநாள் அவள் பாடுவதைக் கேட்டு சொக்கிப் போகிறான் விச்சு. அவள் மனதில் இடம் பிடிக்க அவள் பின்னே ஓடுகிறான். ஒரு கட்டத்தில் மேரி மனதிலும் காதல் அரும்புகிறது. இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கல்லூரிப் படிப்பைத் தொடர அவள் வெளியூர் செல்லவேண்டிய நிலை இருந்தாலும், மேரிக்கு போக மனமில்லை. அந்த சமயத்தில், தங்கையின் காதல் அண்ணனுக்குத் தெரியவருகிறது. கோபமாகி விச்சுவையும் மேரியையும் விளாசித் தள்ளுகிறார். மேரி வீட்டை விட்டு வெளியே செல்ல தடை போடுகிறார். இருவரும் சந்திக்க கூட முடியவில்லை. இப்படியே போனால், பிரித்தே விடுவார்கள் என்று அஞ்சி நண்பர்களின் உதவியுடன் ஊரை விட்டு ஓடிப்போகத் துணிகிறார்கள் காதலர்கள். அவர்களை ஆயுதங்களுடன் ஊரே திரண்டு வந்து மடக்குகிறது. அண்ணனுக்கும் ஊருக்கும் இந்த உலகுக்கும் புதியதொரு வழியைக் காட்டுகிறார்கள் காதலர்கள். எல்லோரும் விக்கித்து நிற்க, விக்கியும் மேரியும் ஊரைவிட்டுச் செல்கிறார்கள். அலைகள் மட்டும் அடித்துக் கொண்டே இருக்கிறது ஓய்வில்லாமல்! கார்த்திக், ராதா, தியாகராஜன் எல்லோருக்கும் இதுதான் முதல்படம். ஆனால், முதல் படம் என்று தெரியாதது போல் சிறந்த நடிப்பைத் தந்திருப்பார்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா அட்டகாசமான கேரக்டர் ரோலை அழகாகப் பண்ணிய படம் இது. இப்படத்தில் அம்மாவாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார் கமலா காமேஷ். கன்யாகுமரி மாவட்டத்தில், முட்டம் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. முதன்முதலாக புத்தம் புதுக் காலை பாடல் காட்சி எடுத்தார்கள். ஆனால், படத்தின் நீளம் கருதி, அந்தப் பாடல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஆனாலும் படத்தின் ரிக்கார்டு பிளேயரில் அந்தப் பாடலும் இடம்பெற்றது. படத்தில், அலைகளையும் பாறைகளையும் ஆர்மோனியப் பெட்டியையும் தாமரைப் பூக்களையும் சம்பளம் வாங்காத நடிகர்களாக்கி, கேரக்டர்களாக்கி, இருப்பார் பாரதிராஜா. அதற்கு ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் பேருதவி செய்து, பெருங்காவியம் படைத்திருக்கிறார். மரத்தில் பெயர்களை எழுதுவதும், மேரிக்காக கறி எடுத்து வரும் விச்சுவும், விச்சுவுக்காக கறி சாப்பிடுவதை நிறுத்திய மேரியும், மேரி ஊருக்குப் போகாமலிருக்க ஜூரம் வர வேண்டி, மேரியின் கக்கத்திள் வெங்காயம் வைப்பதும், விச்சு தனக்கும் வெங்காயம் வைத்துக் கொள்வதும் என காதலின் ஆழங்களைச் சொல்லியிருப்பார் பாரதிராஜா. பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா என பலரும் பாடல்களை எழுதியுள்ளனர். படத்தின் பாடல்கள் இன்று வரை இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. ‘ஆயிரம் தாமரை’, ‘காதல் ஓவியம்’, ‘தரிசனம் கிடைக்காதா’, ‘லம்போதரா’, ‘புத்தம் புது காலை’, ‘ச ரி க ம ப', ‘தோத்திரம் பாடியே', ‘வாடி என் கப்பக்கிழங்கே’, ‘வாழ்வெல்லாம் ஆனந்தமே', ‘விழியில் விழுந்து' என ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய ஹிட். ‘ஆயிரம் தாமரை’, ‘விழியில் விழுந்து’ ஆகிய பாடல்களை வைரமுத்து இயற்றினார். ‘புத்தம் புது காலை’, ‘வாடி என் கப்பா கிழங்கே’ ஆகிய பாடல்களை கங்கை அமரன் இயற்றினார். ‘காதல் ஓவியம்’ என்ற பாடலை பஞ்சு அருணாசலம் இயற்றினார். மீதமுள்ள சிறிய பாடல்களை இளையராஜாவே இயற்றி இசையமைத்தார். ‘புத்தம் புது காலை’ பாடலை இளையராஜா மீண்டும் 2014 இல் மேகா திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் வரும் கிறிஸ்துவப் பெண் பாத்திரம் முதலில் இஸ்லாமிய பெண் பாத்திரமாகத்தான் முதலில் கதை எழுதப்பட்டிருந்ததாம். ஆனால், இதற்கு அப்போது நிறைய எதிர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டதால் பாத்திரத்தின் மதம் மாற்றப்பட்டதாம். `இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை, தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை, கோயிலில் காதல் தொழுகை’ என்று இந்து - முஸ்லிம் பாத்திரங்களையொட்டி வைரமுத்து முன்பே எழுதிவிட்ட வரிகளே இதற்கு சாட்சி. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முதலில் தேர்வானவர் சுரேஷ் தான். ஆனால் அவர் அந்த நேரத்தில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், அவரால் இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதையடுத்தே அந்த வாய்ப்பு கார்த்திக்குக்குச் சென்றது. இந்தப் படத்தில் கார்த்திக்குக்கு பின்னணி குரல் தந்தவர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர். படத்தின் ஒரு காட்சியில் காதலனின் வருகைக்காகக் காதலி நீண்ட நேரம் காத்திருப்பாள். அவன் வந்தவுடன் "ஏன் லேட்டு?” என்று கேட்பாள். இதுதான் இவர்கள் இருவரையும் வைத்து பதிவு செய்யப்பட்ட முதல் காட்சியாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நட்சத்திர விழா மேடையில் கார்த்திக் இந்த சம்பவத்தைச் சொல்லி “பாருங்க... `ஏன் லேட்டு?’ என்ற வசனத்தை வைத்துதான் வந்த முதல் நாளே பாரதிராஜா என்னை நடிக்க வெச்சார். ஆக... சூட்டிங்குக்கு லேட்டா வர்றதுக்கு நான் பொறுப்பில்ல” என்பது போல் கார்த்திக் சொல்ல கீழே அமர்ந்திருந்த பாரதிராஜா உள்ளிட்ட பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (படப்பிடிப்புகளுக்கு வராமல் இருப்பது அல்லது மிகத் தாமதமாக வருவது கார்த்திக்கின் வழக்கம்.) ![]() இத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு நடிகரான தியாகராஜனுக்கு நடிப்பதில் எந்தவொரு ஆர்வமும் இருந்ததில்லை. அதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்ததில்லை. தயாரிப்பாளர் பாஸ்கரின் நண்பரான இவரை ஒரு முறை சந்தித்தபோது நீண்ட நேரம் கூர்ந்து பார்த்திருக்கிறார் பாரதிராஜா. இப்படத்தின் வில்லன் பாத்திரத்துக்கு இவர் சரியாக இருப்பார் என முடிவு செய்து உடனே ஒப்பந்தம் செய்துவிட்டாராம். கூலிங்கிளாஸ், சரிகை வேட்டி, வெள்ளை நிற ஜிப்பா, கைகளில் காப்பு, கழுத்தில் தங்கச் சங்கிலி, ஆகியவற்றுடன் என்பீல்ட் பைக்கில் ‘டபடப’வென்ற சத்தத்துடன் வலம் வரும் தியாகராஜன் என ஒரு வில்லனின் குணாதிசயத்தை ஆரம்ப காட்சியிலேயே வலுவாகப் பதிவு செய்திருப்பார் பாரதிராஜா. இந்தத் திரைப்படத்தில் இவருக்கு குரல் தந்தவர் பாரதிராஜா. பணம் மற்றும் மத வெறியிலும், ஒழுக்க மீறலிலும் ஊறிக்கிடக்கிறார் தியாகராஜன். வீட்டு வாசலில் உள்ள வேலைக்காரரின் வீட்டுக்குடிசைக்குள் நுழைந்து, வேலைக்காரரின் மனைவியை வேட்டையாடுகிறார். அதைக் கண்டு பதறும் மனைவி சில்க் ஸ்மிதா வேறு வழியின்றி காவலுக்கு நிற்கிறார். செல்வாக்கு மிகுந்த தியாகராஜனை எதிர்க்க முடியாமல் அந்த வேலைக்காரரின் குடும்பம் துயரத்துடன் புறப்படும். “எங்கடா போற?” என்கிற தியாகராஜனின் கேள்விக்கு “மனுஷங்க இருக்கற ஊருக்கு” என்று அசத்தலாகப் பதில் சொல்வார் வேலைக்காரர். அவர்களிடம் பணத்தை விட்டு எறிவார் தியாகராஜன். “நான் விசுவாசமாக இருந்ததுக்கு நீங்கதான் நல்ல கூலி கொடுத்திட்டீங்களே எஜமான். இந்தக் கூலி உங்க சம்சாரத்துக்குதான் சேரணும். ஏன்னா அவங்கதானே கஷ்டப்பட்டு உங்களுக்காக காவல் காத்தாங்க” என்று எகத்தாளமும் ஆவேசமும் பொங்கச் சொல்லி விட்டு சென்றுவிடுவார் அந்த வேலைக்காரர். பாரதிராஜாவின் டச்சுடன் அமைந்த அருமையான காட்சி அது. இப்படம் தமிழில் படப்பிடிப்பு நடக்கும் போதே தெலுங்கிலும் படமாக்கப்பட்டது. தெலுங்கிலும் கார்த்திக் மற்றும் ஸ்மிதா தங்கள் வேடங்களிலேயே நடித்தனர். இப்படம் பாரதிராஜாவால் 1983 இல் லவ்வர்ஸ் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. எப்போதும், காதல் ‘அலைகள் ஓய்வதில்லை’. ***** பாடல்கள்
1. புத்தம் புது காலை
படம் : அலைகள் ஓய்வதில்லை (1981) பாடியவர் : எஸ். ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : கங்கை அமரன் வீடியோ பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ பெண் : மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ பெண் : வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ பெண் : வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவை கூடுது பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : லலலல லாலா லாலல லாலா *****
|