ஒரு தலை ராகம்

oru thalai ragam
நடிப்பு
சங்கர், ரூபா, உஷா ராஜேந்தர், தியாகு, சந்திரசேகர், ரவீந்திரன்

பாடல்கள்
டி.ராஜேந்தர்

இசை
டி.ராஜேந்தர்

பின்னணி இசை
ஏ.ஏ.ராஜ்

ஒளிப்பதிவு
ராபர்ட், ராஜசேகரன்

கதை
டி.ராஜேந்தர்

படத்தொகுப்பு
டி.ராஜ்

இயக்கம், தயாரிப்பு
ஈ.எம்.இப்ராகிம்

தயாரிப்பு நிறுவனம்
மன்சூர் கிரியேசன்ஸ்

வெளீயீடு: மே 2, 1980


வீடியோ


     ஒரு தலை ராகம் (Oru Thalai Raagam) திரைப்படம் 1980 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் வெளிவந்தது.

ஈ. எம். இப்ராகிம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், ரூபா, உஷா ராஜேந்தர், தியாகு, சந்திரசேகர், ரவீந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் பஞ்சதாரா சிலக்கா என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இப்படம் முதலில் வெளியான போது தமிழகம் முழுவதும் முப்பது தியேட்டர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலே வெளியானது.

படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசை அமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே ஏறக்குறைய புதுமுகங்கள்.

மாயவரத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படிக்க மாயவரத்தைச் சேர்ந்த இளைஞன் இராஜா சேர்கிறான். கல்லூரிக்கு தினமும் ராஜாவும் நண்பர்களும் ரயிலில் சென்று வருகின்றனர்.

அதே ரயிலில் பயணிக்கும் அமைதியான சக கல்லூரி மாணவியான சுபத்திராவைக் கண்டு அவள் மீது காதல் கொள்கிறான் ராஜா.

சுபத்திராவும் ராஜாவினால் ஈர்க்கப்படுகிறாள் என்றாலும் அவள் அதை தன் குடும்பச் சூழலால் வெளிகாட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள்.

தன் காதலை சுபத்திராவிடம் ராஜா தெரிவித்தும், அவனுக்கு பிடிகொடுக்காமல் சுபத்திரா விலகிச் செல்கிறாள்.

அவள் விலகிச் செல்வதை பொறுக்க இயலாத ராஜா அந்த ஏக்கத்தில் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் உடல் தளர்ச்சி அடைகிறான்.

கல்லூரியின் கடைசி நாளில் ராஜாவின் நண்பன் மூர்த்தி சுபத்திராவின் மௌனத்தை உடைக்கும் விதமாக பேசுகிறான்.

இதனால் மனம் தெளிவடையும் சுபத்திரா மறுநாள் ரயிலில் வரும் ராஜாவிடம் வந்து தன் காதலை தெரிவிக்கிறாள். பதில் சொல்லாமல் இருக்கவே அவள் ராஜாவை நெருங்கி தொடுகிறாள். அப்போது அவன் இறந்துவிட்டது தெரிந்து கதறுகிறாள்.

காதல் சோகம் நிறைந்திருக்கும் படம் என்றாலும் இந்தத் திரைப்படம் அந்தக் காலத்தில் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, இப்படம் அப்போதைய கல்லூரி சூழலையும் மாணவர்களின் தோற்றங்களையும் அசலாகப் பிரதிபலித்தது. இரண்டாவது, இப்படத்தின் பாடல்கள்.

அதுவரை வெளிவந்த தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவர்கள் என்றாலே கோட்சூட் அணிந்து 30 வயதை கடந்தவர்களாக தோன்றுவார்கள். ஆனால் ஒருதலை ராகம் படத்தில் கல்லூரி மாணவர்கள் அவர்களின் இயல்பான நடை, உடை, பாவனைகளுடன் உலவினார்கள்.

மயிலாடுதுறை ரயில் நிலையம், புகழ்மிக்க ஏவிசி கல்லூரி, மாயவரம் தெருக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான கதைக்களம். படம் முழுக்க மயிலாடுதுறையின் அழகை அற்புதமாகக் காட்டியிருப்பார்கள்.

இதனால் இப் படம் கல்லூரி மாணவர்களை வசீகரித்தது. நம் கல்லூரியை அப்படியே காட்டியிருக்கிறார்கள் என மாணவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள்.

படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் பெரும் வெற்றி பெற்றது. அதனால் அதிக தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது.

பெரிய ஊர்களில் இப்படம் 200 நாட்களைக் கடந்து ஓடியது.

காதலியைத் தொடாமல், பேசாமல், காதலன் காதலித்த முதல் படம் இதுதான்.

எப்போதும் குடித்துக்கொண்டிருந்தாலும் சந்திரசேகர் சொல்லும் குருவிக்கதைக்கு, மொத்த தியேட்டரும் கைதட்டி, கண்ணீர் விட்டது.

இந்தப் படத்தில் இருந்துதான் நாயகனுக்கு அவன் சமவயதிலேயே ஒரு நண்பர் கூட்டம் என்ற பார்முலா தமிழ்சினிமாவுக்கு கிடைத்தது.

ஒருதலை ராகம் படத்தைத் தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் பல கல்லூரி சார்ந்த படங்கள் எடுக்கப்பட்டன.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர்களான ராபர்ட் மற்றும் ராஜசேகரன், அடுத்த ஆண்டில் குறைந்த முதலீட்டில் எடுத்த பாலைவனச் சோலை படம். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஒரு தலை ராகம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் என்று டைட்டிலில் வெளியானது. ஆனால் உண்மையில் டி. ராஜேந்தர் இயக்கத்தில்தான் இப்படம் உருவானது என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

டி. ராஜேந்தர் பெயரில் கதை, வசனம், பாடல்கள் இசை மட்டுமே டைட்டிலில் வெளியானது. ஏ. ஏ. ராஜ் பின்னணி இசையை வழங்கியிருந்தார்.

மன்மதன் ரட்சிக்கனும் இந்த மன்மதக்காளைகளை, வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது, கொக்கரக்கோழி கூவுற வேளை, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது. பாடல்களைக் கேட்கவே மக்கள் திரும்பத் திரும்ப படத்தைப் பார்த்தார்கள்.

மாயவரத்தில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தின்போது ரயில் பயணத்தில் டி. ராஜேந்தர் தானே பாடல்களை இயற்றி, மெட்டமைத்து பாடுவது வழக்கமாம். கூடையில கருவாடு... கூந்தலிலே பூக்காடு போன்ற பாடல்கள் அப்போது உதயமானவைதான்.

`வாசமில்லா மலரிது’ மற்றும் `இது குழந்தை பாடும் தாலாட்டு’ ஆகிய இரண்டு பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருமையாகப் பாடியிருந்தார்.

‘என் கதை முடியும் நேரம் இது’ மற்றும் `நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று டி.எம்.சௌந்தரராஜன் இந்தப் படத்தில் பாடிய பாடல்கள் அவரின் வீழ்ச்சிக்கான குறியீடு போலவே அமைந்தது தான் பரிதாபம்.

‘கடவுள் வாழும் கோவிலிலே...’ என்ற அருமையான மென்சோகப் பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார் பி. ஜெயச்சந்திரன்.

அந்த மன்மதன் ரட்சிக்கணும்... பாடல் மலையாள பாடகர் ஜாலி ஆப்ரஹாம் தமிழில் பாடிய அரிதான பாடல்களில் ஒன்றாகும்.

சங்கருக்கு தமிழில் இது அறிமுகப்படம். அவர் மலையாளத்தில் அறிமுகமான `மஞ்சள் விரிஞ்ச பூக்கள்’ படமும் ஒரு வெற்றிப் படமாகும்.

கதாநாயகியான ரூபா, லஷ்மி தேவி என்னும் நடிகையின் மகளாவார். ரூபா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகையாவார். குறிப்பாக, கன்னடத்தில் அதிகம் நடித்திருந்தார். ரூபாவும் இந்தப் படத்தில்தான் தமிழில் அறிமுகமானார்.

நடிகர் ரவீந்தர், நடிகர் தியாகு ஆகியோருக்கும் அறிமுக படம் இதுவே.

நாயகியின் தோழி பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்து அசத்தியிருந்தார் உஷா. பின்னாளில் உஷா டி. ராஜேந்தரின் மனைவியானார்.

‘மன்மதன் ரட்சிக்கணும்’ பாடல் காட்சி தொடங்குவதற்கு முன்னால் இளம் வயது டி. ராஜேந்தர் படத்தில் தோன்றுவார். இந்திப் பாடல் பாட முனையும் அவரை, மாணவர்கள் கூச்சலிட்டு துரத்துவார்கள். இது தமிழகத்தில் அப்போது நிலவிய இந்தி எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடாகும்.

படம் வெளியான காலத்தில் டி.ராஜேந்தரின் அடுக்குமொழி வசனங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தின் பின்னணி, தோற்றம், சிகையலங்காரம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்காகவே இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம்.

மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த இப்படம் திரையரங்கில் 365 நாட்கள் ஓடியது.

*****

வீடியோ


*****

பாடல்கள்
1. இது குழந்தை பாடும் தாலாட்டு
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வீடியோ


இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்
வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்

வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது?

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

*****
2. வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வீடியோ


வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது
மீனாட்க்ஷியை தேடுது

ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது
மீனாக்ஷியை தேடுது

ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

*****
3. கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & குழுவினர்

வீடியோ


கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா...
தாளமில்லாப் பின்பாட்டு
கத்து கிட்டா எங்கூத்து
என்னுயிர் ரோசா
எங்கடி போறே
மாமலர் வண்டு
ஆடுது இங்கு
அம்மாளே
அம்மாளே...

பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோடகோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

அல்லி வட்டம் புள்ளி வட்டம்
நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம் புள்ளி வட்டம்
நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே
புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே ஆஹா...
புத்தி கெட்ட விதியாலே
போறவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா
எங்கடி போறே
மாமலர் வண்டு
ஆடுது இங்கு
அம்மாளே
அம்மாளே...

பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

ஆயிரத்தில் நீயே ஒண்ணு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி ஆஹா...
ஓடாதடி காவேரி
உம்மனசில் யாரோடி

என்னுயிர் ரோசா
எங்கடி போறே
மாமலர் வண்டு
ஆடுது இங்கு
அம்மாளே
அம்மாளே...

பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

என்னுயிர் ரோசா
எங்கடி போறே
மாமலர் வண்டு
ஆடுது இங்கு
அம்மாளே அம்மாளே
அம்மாளே அம்மாளே...

*****
4. கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : பி.ஜெயசந்திரன்

வீடியோ


கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம் முகாரி ராகம்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

முந்தானை பார்த்து முந்நூறு கவிதை
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி

முந்தானை பார்த்து முந்நூறு கவிதை
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி

முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி

ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்

கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல
மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி

கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல
மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி

கண்கெட்ட பின்னே சூரிய உதயம்
எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி

ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும்
என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்
முகாரி ராகம்
முகாரி ராகம்
முகாரி ராகம்

*****
5. மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : ஜாலி ஏபிரகாம்

வீடியோ


மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா
அட நம்ம பார்வதி வராடா
அடடா அடடா பாத்துக்கோடா

சேய்வோலே காமாந்தகா துட்சா
ரோட்ல பெண்களே நடமாட முடியலைடா
உங்க கண் பட்டாலே
கர்ப்பம் உண்டாகிடும் போல இருக்கே
உங்க சதையெல்லாம் துரு பிடிக்க போரதுடா
நீங்க எல்லாம் நல்ல இருப்பேளா
உங்கள எல்லாம் ஈஸ்வரன் தாண்ட ரட்சிக்கணும்

என்ன சொன்னேள்
ஈஸ்வரன் ரட்சிக்கணுமா
எங்கள அந்த மன்மதன் ரட்சித்தாலே போதுமே

அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே
மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா
இளம் பெண்களை வெல்லடா

அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே
மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா
இளம் பெண்களை வெல்லடா

மாடி வீட்டு லலிதா மயங்கி நின்னா அழக
கோடி வீட்டு கீதா குலுங்கிகிட்டே சிரிச்ச
கோவலன் கண்ட அந்த கால மாதவி
நான் கேவலம் என்பேன் உந்தன் முன்னே மாலதி
எச்சில் ஊர பாதுஷா ஏங்க வைக்கும் என் உஷா

அட நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்
ரம்மிய கண்டு வெம்பி வெடிப்பேன்
அட நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்
ரம்மிய கண்டு வெம்பி வெடிப்பேன்

நளினத்தைக் காட்டும் நளினி
நலுங்காமல் வருவதை கவனி
ரசனையை தூண்டும் ரதி நீ
நாள்தோரும் வருவேன் பவனி
நான் நாள்தோரும் வருவேன் பவனி

கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா
என் ராகத்திலே மயங்கி வாடி ராதா

கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா
என் ராகத்திலே மயங்கி வாடி ராதா

அட பக்கத்து வீட்டு பைங்கிளி
என் சொர்கத்தை காட்டும் சுந்தரி

அட பக்கத்து வீட்டு பைங்கிளி
என் சொர்கத்தை காட்டும் சுந்தரி

பிரேமலதா உன் பிரம்மை சதா
பிரேமலதா உன் பிரம்மை சதா

உறக்கும் இல்லை சுதா
இரக்கம் காட்டேன் ஷீலா
மறக்க மாட்டேன் லீலா

நீலாம்பரி ராகம் உனக்காக நீலா
ஒன்றும் சொல்லாமல் போவாயோ என் கலா

நீலாம்பரி ராகம் உனக்காக நீலா
ஒன்றும் சொல்லாமல் போவாயோ என் கலா
அட கலா

சந்திக்கத் துடிக்கும் சாந்தி
நிந்திக்க நினைப்பாள் ஜயந்தி
இடையினில் கிடைத்தால் வசந்தி
நான் எவளிடம் போவேன் மயங்கி
நான் எவளிடம் போவேன் மயங்கி
நான் எவளிடம் போவேன் மயங்கி

*****
6. என் கதை முடியும் நேரமிது
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

வீடியோ


என் கதை முடியும் நேரமிது
என்பதை சொல்லும் ராகமிது

என் கதை முடியும் நேரமிது
என்பதை சொல்லும் ராகமிது
அன்பினில் வாழும் உள்ளமிது
அணையே இல்லா வெள்ளமிது
அன்பினில் வாழும் உள்ளமிது
அணையே இல்லா வெள்ளமிது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது

உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது

பேதமை நிறைந்தது என் வாழ்வு
அதில் பேதையும் வரைந்தது சில கோடு

பித்தென்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு
பித்தென்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே

ஒளியாய் தெரிவது வெறுங் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது
ஒளியாய் தெரிவது வெறுங் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது

ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்

துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்

துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்

*****
7. நான் ஒரு ராசியில்லா ராஜா
படம் : ஒரு தலை ராகம் (1980)
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

வீடியோ


நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா

பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களைக் காணவில்லை
பாட்டிசைக்க மேடை கண்டேன்
ராகங்களைக் காணவில்லை

பலர் இழுக்க தேரானேன்
ஊர்வலமே நடக்கவில்லை
கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கையிரண்டும் போடட்டும் தாளங்களே
கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே
கையிரண்டும் போடட்டும் தாளங்களே

நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா

என்கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபமில்லை

என்கதையை எழுதிவிட்டேன்
முடிவினிலே சுபமில்லை

இயன்றவரை வாழ்ந்துவிட்டேன்
மனதினிலே சாந்தியில்லை
தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு
தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு

நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது
என் ஆசைக்கு இல்லை உறவு

நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா