|
|
மூடு பனி நடிப்பு
ஷோபா, பிரதாப், என். விஸ்வநாதன், சாமிக்கண்ணு, காந்திமதி, கோகிலா மோகன், சாந்தி வில்லியம்ஸ், கே.எஸ். ஜெயலட்சுமி, விஜய சந்திரிகா, பானுச்சந்தர்பாடல்கள்
கங்கை அமரன்இசை
இளையராஜாபடத்தொகுப்பு
D. வாசுமூலக்கதை
ராஜேந்திரகுமார்திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்
பாலுமகேந்திராதயாரிப்பு நிறுவனம்
ராஜா சினி ஆர்ட்ஸ்வெளீயீடு:
6 நவம்பர் 1980வீடியோ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த மூடு பனி திரைப்படம் இளையராஜா இசையமைத்த 100வது திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா, என். விஸ்வநாதன், சாமிக்கண்ணு, காந்திமதி, கோகிலா மோகன், சாந்தி வில்லியம்ஸ், கே.எஸ். ஜெயலட்சுமி, விஜய சந்திரிகா, பானுச்சந்தர் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1976ல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய இளையராஜா, மிகக் குறுகிய காலத்தில், அதாவது நான்கே ஆண்டுகளில், தனது நூறாவது படமாக இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘கோகிலா’, ‘அழியாத கோலங்கள்’ என்கிற தனது முதல் இரண்டு திரைப்படங்களில், சலீல் செளத்ரியை இசையமைப்பாளராக உபயோகித்தாலும், மூன்றாவது திரைப்படத்தில் இருந்து இளையராஜாவையே தனது இசையமைப்பாளராக தொடர்ந்து பயன்படுத்தினார் பாலுமகேந்திரா. 'சந்தியாராகம்' படத்திற்கு மட்டும் எல்.வைத்யநாதன் இசையமைத்திருந்தார். ‘மூடுபனி’ திரைப்படத்தில்தான் 13 வயதான ‘திலீப்’ என்கிற இளைஞர் ‘கீபோர்ட் புரோகிராமர்’ ஆக இளையராஜாவின் குழுவில் பணிபுரியத் தொடங்கினார். அந்த இளைஞர்தான், பின்னாளில் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று உலக அளவில் அறியப்பட்ட இசைக்கலைஞராக மாறினார். பாலுமகேந்திராவும் இளையராஜாவும் இணைந்து பணிபுரிந்த முதல் திரைப்படமாக மூடு பனி அமைந்த போதிலும், ஷோபாவின் கடைசிப் படமாகவும் அமைந்து போனது சோகமே. இந்தப் படம் வெளியாவதற்கு சுமார் ஏழு மாதங்களுக்கு முன், அதாவது மே 1, 1980 அன்று ஷோபா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், பாலுமகேந்திரா பல சர்ச்சைகளையும் புகார்களையும் அவதூறுகளையும் சட்டப் பிரச்னைகளையும் அந்தச் சமயத்தில் சந்தித்தார். இருப்பினும் ஷோபாவிற்கும் தனக்குமான உறவை பாலுமகேந்திரா மறைத்து வைக்க நினைத்ததில்லை. ‘எனக்கு எல்லாமாய் இருந்த என் அன்பு மனைவி அம்மு (ஷோபா) வுக்கு ஆத்ம சமர்ப்பணம் - பாலுமகேந்திரா’ என்றுதான் ‘மூடுபனி’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு தொடங்கும். அதே சமயம் ஷோபா இறந்தபோது, அவரது வயது 17 தான். ஆகவே மைனராக இருந்த ஒருவரை ‘மனைவி’ என்று பொதுவில் குறிப்பிடும் சட்டப் பிரச்சினையை பாலுமகேந்திரா அறியவில்லையோ என்னவோ. இருப்பினும், ஷோபாவின் மறைவையொட்டி, அவரது நினைவாக பாலுமகேந்திரா உருவாக்கிய திரைப்படம்தான் ‘மூன்றாம் பிறை’. சைக்கலாஜிகல் திரில்லர் (Psychological Thriller) என்னும் புதிய பிரிவை தமிழ் சினிமாவில் முதன் முதலில் துவக்கி வைத்தது 1978-ல் வெளிவந்த பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படம் தான். அதே போல் 'கோகிலா', 'அழியாத கோலங்கள்' என்று இரண்டு மெல்லுணர்வு திரைப்படங்களை இயக்கிவிட்டு, மூன்றாவது திரைப்படத்தில் உளவியல் சார்ந்த ஒரு திரில்லரை பாலுமகேந்திரா கதைக்களமாக எடுத்துக் கொண்டார். ‘மூடுபனி’ திரைப்படத்தின் கதைப் பார்ப்போம். பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் தந்தை, தன் தாயை தினமும் கொடுமைப்படுத்துவதை பார்த்து வளர்கிறான் ஒரு சிறுவன். இதனால் அவனுக்கு ‘பாலியல் தொழிலாளிகள்’ மீது வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது. எனவே, அவன், (பிரதாப் போத்தன்) வளர்ந்து இளைஞனான பிறகு அவர்களைக் கடத்தி கொலை செய்கிறான். இந்தத் தொடர் கொலைகளால் ஊரே பரபரப்பாகிறது. பிறகு, ஷோபாவைப் பார்க்கும் அந்த இளைஞனுக்கு அவளின் களங்கமற்ற முகமும் தோற்றமும் வெகுவாகப் பிடித்துப் போகிறது. தன் தாயின் பிரதியாக ஷோபாவைப் பார்க்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் ஷோபா ஏற்கெனவே ஒருவரை காதலிப்பதால் நாகரிகமாக மறுக்கிறாள். ஆனால் ஷோபாவை மறக்க முடியாத பிரதாப் அவளை கடத்திக் கொண்டு போய் ஒரு பங்களாவில் சிறை வைக்கிறான். அவளை சில காலத்திற்கு தன்னோடு தங்கச் சொல்லி வற்புறுத்துகிறான். அச்சமயத்தில் தன்னுடைய நல்லியல்புகளைப் பார்த்து தன் மீது அவளுக்கு காதல் வந்துவிடும் என்று நம்புகிறான். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. ‘மூடுபனி’ திரைப்படத்தை ஹிட்ச்காக்கிற்கு தாம் செலுத்திய மரியாதை என்று பாலுமகேந்திராவும் ஒரு பதிவில் சொல்லியிருந்தார். ஆனால் ‘மூடுபனி’ திரைப்படம் 1965ல் வெளியான ‘The Collector’ என்கிற ஆங்கிலத் படத்தின் சாயலைக் கொண்டிருந்தது. John Fowles என்கிற பிரிட்டிஷ் நாவலாசிரியர், 1963ல் ‘The Collector’ எழுதிய நாவலையொட்டி அத் திரைப்படம் உருவாகியிருந்தது. அப் படத்தில் வரும் பல சம்பவங்கள், வசனங்கள், திருப்பங்கள் அச்சு அசலாக அப்படியே ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால் ராஜேந்திரகுமார் எழுதிய ‘இதுவும் ஒரு விடுதலைதான்’ என்கிற க்ரைம் நாவல்தான், திரைப்படமாக ஆக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் படத்தின் டைட்டிலில் ‘மூலக்கதை’ ராஜேந்திரகுமார் என்று வரும். உளப்பாதிப்பு உள்ள இளைஞனாக பிரதாப் போத்தன் அருமையாக நடித்திருந்தார். ஷோபா பாலுமகேந்திராவின் கேமரா வழியாக தனி அழகுடன் மிளிர்ந்ததை ‘மூடுபனி’படத்தின் பல காட்சிகளில் உணர முடியும். இந்தியத் திரைவானில் இன்றளவும் பூர்த்தி செய்யப்படாத வெற்றிடம் ஷோபாவினுடையது என்று சொன்னால் மிகையில்லை. பாலுமகேந்திரா முதலில் இயக்கிய கன்னடத் திரைப்படமான ‘கோகிலா’வில் அறிமுகமான நடிகர் மோகன் (மைக் மோகன்) 'மூடுபனி' திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் வந்து போவார். டைட்டிலில் அவரது பெயர் ‘கோகிலா மோகன்’ என்றே வரும். இப்படத்தில் இன்ஸ்பெக்டரின் மகனாகவும், ஷோபாவின் காதலனாகவும் நடிகர் பானுச்சந்தர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் இன்னொரு பிரதான பலமாக இளையராஜாவின் இசையைச் சொல்ல வேண்டும். இப்படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’ என்கிற பாடலை காலம் உள்ளளவும் எவரும் மறக்க முடியாது. ஜேசுதாஸ், மிக அருமையான இதைப் பாடியிருப்பார். கிடார் பயிலும் இளைஞர்களின் பாலபாடமாக இந்தப் பாடல் பிறகு மாறியது. படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் ‘பருவ காலங்களின்’ பாடலும் கேட்பதற்கு புத்துணர்ச்சியைத் தரும். மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி, இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருந்தார்கள். இது தவிர, ‘Sing Swing’ என்கிற அட்டகாசமான இசையுடன் கூடிய ஆங்கிலப் பாடலும் இப்படத்தில் உண்டு. இளையராஜாவின் ஆஸ்தான பியானிஸ்ட்டான விஜிமானுவல் எழுதிய இந்தப் பாடலை கல்யாண் மிக ஸ்டைலாகப் பாடியிருந்தார். பின்னணி இசையிலும் தன் அபாரமான திறமையைக் காட்டியிருந்தார் இளையராஜா. பரபரப்பான காட்சிகளில் அட்டகாசமாக ஒலிக்கும் இசை அதன் பரபரப்பைக் கூட்டியது. அதே போல் பல இடங்களில் திகிலுடன்கூடிய மெளனத்தையும் கொண்டிருந்தது. ‘மூடுபனி’, அதன் வித்தியாசமான உள்ளடக்கம், சிறந்த இசை, ஒளிப்பதிவு, நடிப்பு போன்வற்றால் பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. அச்சமயம் வெளியான ‘நிழல்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற படங்களோடு போட்டியிட்டாலும், பல அரங்குகளில் ‘மூடுபனி’ வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. தமிழில் எடுக்கப் பட்ட நேர்கோட்டு த்ரில்லர் படங்களில் முக்கியமான படம் மூடுபனி. ***** பாடல்கள்
1. என் இனிய பொன் நிலாவே
படம் : மூடு பனி (1980) இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ் வீடியோ என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே தர தர தா த் த த என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என்னாசை உன்னோரமே தர தர தா த் த த வெந்நீல வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே... என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே தர தர தா த் த த தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே தர தர தா த் த த கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இதுதானே என் ஆசைகள் அன்பே... என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே ***** |